ஓசூரில் 24-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலம்பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு


ஓசூரில் 24-ந் தேதி விநாயகர் சிலைகள் ஊர்வலம்பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு
x

ஓசூரில் 400 விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில் வருகிற 24-ந் தேதி சிலை ஊர்வலம் நடக்கிறது. இதில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் 400 விநாயகர் சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வரும் நிலையில் வருகிற 24-ந் தேதி சிலை ஊர்வலம் நடக்கிறது. இதில் பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக மும்பையில் மிக பிரமாண்டமாக விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். அதற்கு இணையாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஆண்டுதோறும் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஓசூர் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடைபெறுகின்றன.

ஓசூர் பகுதியில் ஒரு அடி முதல் 18 அடி உயரம் வரை உள்ள சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். சனாதன விநாயகர், பால விநாயகர், வரசித்தி விநாயகர், மவுன விநாயகர், ராஜ விநாயகர், கருட விநாயகர், சிம்ம விநாயகர், கேதர்நாத் விநாயகர், என பல்வேறு பெயர்களில் விநாயகரை வைத்து வழிபாடு நடந்து வருகிறது.

பக்தர்களை கவர்ந்த போலீஸ் நிலையம்

ஓசூர் ஸ்ரீநகர் பகுதி நண்பர்கள் குழு சார்பில், 24 மணி நேரமும் உழைக்கும் போலீசாருக்கு மதிப்பளித்து நன்றி தெரிவிக்கும் வகையில் போலீஸ் நிலையம் போல் செட் அமைத்து விநாயகரை வைத்து நடத்தப்பட்டது. முழுக்க முழுக்க போலீஸ் நிலையம் போல அந்த பகுதியில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்திற்குள் முகப்பு வாசலில் 2 போலீசார் விநாயகர் வேடத்தில் நிற்பது போலவும், அதன் அருகில் போலீஸ் ஜீப் நிற்பது போலவும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

போலீசார், சிறை, என அமைக்கப்பட்ட இந்த அரங்கை பக்தர்கள் ஆச்சரித்துடன் பார்த்து வருகிறார்கள். ஐதராபாத்தில் இருந்து விநாயகர் சிலை கொண்டு வரப்பட்டு, சினிமா கலைஞர்களை கொண்டு இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதே போல ஓசூர் தேர்பேட்டை பச்சை குளம்நடுவில் பெருமாள் கோவில் போன்று அரங்கு அமைத்து பெருமாள் கீழே விநாயகர் அமர்ந்துள்ளதை போல சிலை வைக்கப்பட்டுள்ளது.

இதில் பக்தர்கள் செல்ல குளம் நடுவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் சிங்கம் கர்ஜிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஓசூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை பொதுமக்கள் நீர்நிலைகளில் கரைத்து வருகின்றனர். வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெறுகிறது. இதையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story