தேனியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் சிவசேனா கட்சியினர் ஊர்வலம்
தேனியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் சிவசேனா கட்சியினர் ஊர்வலம் சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தேனி நேரு சிலை சிக்னல் பகுதிக்கு சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் சிலர், ஒரு விநாயகர் சிலையுடன் வந்தனர். தங்கள் அமைப்புக்கு தேனியில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் போலீசார் அனுமதி மறுத்ததாகவும், தடையை மீறி அங்கிருந்து அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றுக்கு சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் சிலையுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார், சிவசேனா கட்சியினரை தடுத்து நிறுத்தி அனுமதியின்றி ஊர்வலம் செல்லக்கூடாது என்று தெரிவித்தனர். மேலும், கடந்த கால நடைமுறையை பின்பற்றி சிலைகள் வைக்க அனுமதிக்கப்படுவதாகவும், புதிதாக சிலைகள் வைக்க விரும்பினால் கோர்ட்டு மூலம் அனுமதி பெற்று வர வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்கள் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது அவர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபாகரன் அங்கு வந்தார். அவர், சிவசேனா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சிலையுடன் ஊர்வலமாக நடந்து செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறியதுடன், சரக்கு வேனில் எடுத்துச் சென்று கரைக்க போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து அக்கட்சியினர் ஒரு சரக்கு வேனில் விநாயகர் சிலையை எடுத்துக் கொண்டு அரண்மனைப்புதூர் முல்லைப்பெரியாற்றுக்கு கொண்டு சென்று கரைத்தனர்.