தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்: கோரிக்கைகளை ஓய்வுபெற்ற நீதிபதிகளிடம் தெரிவிக்கலாம் -ஐகோர்ட்டு


தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்: கோரிக்கைகளை ஓய்வுபெற்ற நீதிபதிகளிடம் தெரிவிக்கலாம் -ஐகோர்ட்டு
x

தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல்: கோரிக்கைகளை ஓய்வுபெற்ற நீதிபதிகளிடம் தெரிவிக்கலாம் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகளுக்கான தேர்தல் மார்ச் 26-ந்தேதி நடைபெறும் என்கிற அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும், தேர்தல் நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்கக்கோரியும் அந்த கவுன்சில் உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இந்த கவுன்சில் தேர்தலை நடத்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், நீதிபதி வி.பாரதிதாசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் ஆஜரான வக்கீல் கிருஷ்ணன் ரவீந்திரன், நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 1-ந்தேதி நடைபெற உள்ளது என்று கூறினார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறும்வகையில் அனைத்து நடைமுறைகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும், தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதற்கு நீதிபதி, மனுதாரர்கள் தங்கள் கோரிக்கைகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களான ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகளிடம் தெரிவித்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி, வழக்கை ஜூன் 9-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


Next Story