ஆண்டுக்கு 39,383 மெட்ரிக் டன் மலர்கள் உற்பத்தி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 39,383 மெட்ரிக் டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 39,383 மெட்ரிக் டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அமைச்சர் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், சர்வதேச மலர் ஏல மையம் மற்றும் வேப்பனப்பள்ளி அருகே ஜீனூர் ஊராட்சியில் தோட்டக்கலை கல்லூரி அமைப்பதற்கான இடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி, தோட்டக்கலைத்துறை இயக்குநர் டாக்டர்.பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர், கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி ஓசூர் சர்வதேச மலர் ஏல மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த மையம், எஸ்.சி.எம். (நபார்டு மற்றும் டபிள்யூ.ஐ.எப்.) திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கு, மலர் தண்டுகளுக்கான குளிர்பதன கிடங்கு, ஏல மையம், தரம் பிரிப்பு கூடம், கூட்ட அரங்கம், பயிற்சி அரங்கம் மற்றும் வினியோகக்கூடம் ஆகிய கட்டிடங்கள் ரூ.20 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
மேலும், ஓசூர் மற்றும் சுற்றியுள்ள விவசாயிகளிடமிருந்து மொட்டுகளாக வரவழைக்கப்பட்டு, மலர் குளிர்பதன கிடங்குகளில் அதை மின் பரிமாற்ற முறையில் வியாபாரிகளால் காணொலி காட்சி மூலம் பார்வையிட செய்து, அதனுடைய தரம் குறித்து காணொலி மூலம் அறிவிக்கப்பட்டு, பின்னர் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏல முறையில் மலர்களுக்கு உட்சபட்ச விலை கிடைக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மலர்களின் தரம் குறையாமல் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து சில வாரங்கள் நீடிக்கும் வண்ணம் கட்டுமான வசதி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி பரப்பு சுமார் 3,700 ஹெக்டர் உள்ளது. மாவட்டத்தில் ரோஜா, சாமந்தி, முல்லை, மல்லிகை, ஜெர்பரா, கார்னேஷன் போன்ற மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக 39 ஆயிரத்து 383 மெட்ரிக் டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. சாகுபடி செய்யப்படும் மலர்கள் உள்நாடு மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அரபு நாடுகள் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சர்வதேச ஏல மையம்
இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மலர்கள் இதுவரை பெங்களூருவில் உள்ள பன்னாட்டு மலர்கள் ஏல மையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்டது. இது மலர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தற்போது, இம்மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் சர்வதேச ஏல மையம் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நேரடியாக தாங்கள் விளைவிக்கும் பூக்களை ஏல மையத்திற்கு எடுத்து வந்து இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து உரிய விலை பெறலாம். மேலும் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி மையம் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, வேளாண் வணிக விற்பனை துணை இயக்குனர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் சரவணகுமார், வடிவேல், வேளாண்மை அலுவலர் கயிலை மன்னன், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் ஜீவஜோதி, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், தாசில்தார்கள் கவாஸ்கர், சம்பத் கவாஸ்கர் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.