விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்
காரைக்குடி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்குடி,
காரைக்குடி அருகே விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்று. இந்த விழாவின் போது நாடு முழுவதும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் அவை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை திருப்பத்தூர் அருகே பிரசித்தி பெற்ற பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் சிவகங்கை, காரைக்குடி, கல்லல், சாக்கோட்டை, சிங்கம்புணரி, காளையார்கோவில், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, கரைக்கப்படுவது வழக்கம்.
73 சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் காரைக்குடி அருகே குன்றக்குடி-பிள்ளையார்பட்டி சாலையில் உள்ள தனியார் மில் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து இந்த பணியில் ஈடுபட்டுள்ள ராஜஜெயபால் கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் ஊர்வலம் சரிவர நடைபெறவில்லை. கடந்தாண்டு கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தற்போது 73 சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் சுமார் 2 அடி முதல் 9 அடி உயரம் வரை தயாரிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தை தவிர பல்வேறு மாவட்டங்களில் இருந்து இங்கு விநாயகர் சிலைகள் ஆர்டர் கேட்டு வருகின்றனர். ஆனால் நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால் சிலைகள் தயாரிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
மாசு ஏற்படாது
விநாயகர் சிலைகள் ரூ.2 ஆயிரத்து 500 முதல் 11 ஆயிரத்து 500 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இந்த சிலைகளுக்கு ஆர்டர்கள் கொடுக்கப்பட்டு தற்போது டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 10 அடி உயரமுள்ள 5 சிலைகள் மட்டுமே இருப்பில் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் இந்த சிலைகள் முற்றிலும் மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் மைதா மாவு, சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படாது.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியுடன் இந்த சிலைகள் தயாரிக்கப்படுவதால் நீர்நிலைகளில் இந்த சிலைகளை கரைக்கும் போது முற்றிலும் கரைந்துவிடும். சிலைகள் தயாரிப்பு பணிக்காக சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து தங்கியிருந்து சிலைகளை தயாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.