தமிழகம் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறமுடியும்


தமிழகம் உலகத்துக்கே வழிகாட்டியாக மாறமுடியும்
x

மக்களுக்கான கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டால் தமிழகம் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கும் என்று மாநில கல்விக்கொள்கை குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவகர்நேசன் தெரிவித்தார்.

மதுரை

மக்களுக்கான கல்வித்திட்டம் உருவாக்கப்பட்டால் தமிழகம் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கும் என்று மாநில கல்விக்கொள்கை குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவகர்நேசன் தெரிவித்தார்.

தேசிய கல்விக்கொள்கை

தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், தமிழக கல்விக்கொள்கை எதிர்கொள்ளும் சவால்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முரளி தலைமை தாங்கினார். மாநில கல்விக்கொள்கை குழுவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜவகர்நேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, கொரோனா பாதிப்பு தொடங்கிய காலகட்டத்தில் தேசிய கல்விக்கொள்கை-2020 வெளியிடப்பட்டது.

இந்த கொள்கையில் கடந்த 75 வருடங்களாக பல்வேறு கல்விக்கொள்கைக்கான பரிந்துரைக்குழுக்கள் நிராகரித்த அனைத்து அம்சங்களையும் ஒட்டுமொத்தமாக சேர்த்து வணிகமயமாக்கப்பட்ட, மத மயமாக்கப்பட்ட கல்வி திட்டமாக அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு தமிழக மக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து, தமிழக அரசு நமது மாநிலத்தில் தனித்துவம் வாய்ந்த கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்தது. இதற்காக மாநில கல்விக்கொள்கை குழுவை எனது தலைமையில் உருவாக்கியது.

இந்த குழுவில் 13 துணைக்குழுவும், உள்நாடு, வெளிநாடு மற்றும் பல்வேறு துறைசார்ந்த கல்வியாளர்கள் என 113 பேர் பணியாற்றினர். இந்த குழு மாநிலத்துக்கான தனித்துவம் வாய்ந்த கல்விக்கொள்கையை 182 பக்க அறிக்கையாக அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை மக்களிடம் மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து கேட்ட கருத்துக்களை உள்ளடக்கியிருந்தது.

உலகுக்கே முன்மாதிரி

இது குறித்து அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்கள் இதுவரை எந்த விவாதமும் நடத்தாமல் இருப்பது வருந்தத்தக்கது. கல்வியாளர்களை அவமரியாதை செய்யும் நிலைக்கு அதிகாரிகள் சென்ற போது, அறிக்கையை சமர்ப்பித்துவிட்டு குழுவில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கல்வி என்பது மக்களுக்கான ஜனநாயக ரீதியிலான, அறிவு சார்ந்த, அறிவியல் வளர்ச்சி சார்ந்த, சமத்துவம் வாய்ந்த கல்வியாக இருக்க வேண்டும்.

இந்த பண்புகள் இல்லாத கல்வியால் நாட்டின் வளர்ச்சி தடைபடும். இத்தகைய குணங்களை கொண்ட கல்வி முறை உருவாக்கப்பட்டால், தமிழகம் உலகத்துக்கே வழிகாட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, மக்களுக்கான கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மக்களும், கல்வியாளர்களும் அரசை வலியுறுத்த வேண்டும் என்றார்.

பின்னர், இந்த விவகாரங்கள் குறித்து மக்கள் கல்வி இயக்கத்தின் பேராசிரியர் பிரபா கல்விமணி, தமிழ் தேசிய பேரியக்கத்தின் வெங்கட்ராமன், அகில இந்திய மாணவர் அமைப்பின் அபிதா உள்ளிட்டோர் பேசினர். அத்துடன், சுமார் 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.


Next Story