காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சமாதியில் கோரிக்கை மனுவை வைத்து பேராசிரியர்கள் நூதன போராட்டம்
காந்திகிராம பல்கலைக்கழகத்தில் சமாதியில் கோரிக்கை மனுவை வைத்து பேராசிரியர்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பதிவாளர் சிவக்குமாருக்கு 2-வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். உடனடியாக முழுநேர பதிவாளரை நியமிக்க வேண்டும். 2 ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. முழுநேர துணைவேந்தரை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, கருப்பு பேட்ஜ் அணிந்து பல்கலைக்கழக பெல் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் துணைவேந்தர் இல்லம் அருகே உள்ள பல்கலைக்கழக நிறுவனரும், முன்னாள் துணைவேந்தருமான ராமச்சந்திரன் சமாதியில் கோரிக்கை மனுவை வைத்தனர். அங்கு தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்க செயற்குழு உறுப்பினரான கூட்டுறவுத்துறை பேராசிரியர் மணிவேலிடம் கேட்டபோது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலமாக போராடி வருகிறோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல்கலைக்கழக நிறுவனர் சமாதியில் கோரிக்கை மனுவை நிைறவேற்றுவதற்காக வைத்தோம் என்றார்.