நல்லம்பள்ளியில் தமிழ் கனவு பிரசார நிகழ்ச்சி


நல்லம்பள்ளியில் தமிழ் கனவு பிரசார நிகழ்ச்சி
x
தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 'மாபெரும் தமிழ் கனவு' பிரசார நிகழ்ச்சி தர்மபுரி நல்லம்பள்ளியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரியில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் படிக்கும் 1,000 மாணவ-மாணவிகள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த பிரசார நிகழ்ச்சியில் தமிழர் அறம் என்ற தலைப்பின் கீழ் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் மற்றும் கல்வி கடந்து வந்த பாதை என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் பார்த்திபராஜா ஆகியோர் பேசுகிறார்கள். மேலும், சொற்பொழிவுகளில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு உயர்க்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழர் பெருமிதம் குறித்த குறிப்பேடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, முன்னோடி வங்கி, தாட்கோ, நூலக துறை, மகளிர் திட்டம், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை, மாவட்ட தொழில் மையம், மாவட்ட திறன் பயிற்சி ஆகிய துறைகள் சார்பாக தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story