தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை
x

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. எனினும் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், பயன்படுத்துவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தப்பட்ட விதியின் கீழ் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமித்தல், வினியோகம், விற்பனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு ஜூலை 1-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதில் பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் பாலீஸ்டைரீன் (தெர்மாகோல்).

தட்டுகள், கோப்பைகள், குவளைகள், முட்கரண்டிகள், கரண்டிகள், கத்திகள், உறிஞ்சு குழல்கள், தட்டுகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இனிப்பு பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பி.வி.சி.பேனர்கள், கிளரிகள் ஆகிய பொருட்கள் அடங்கும்.

உரிய நடவடிக்கை

ஒருமுறை பயன்பாட்டுக்கு பின்னர் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான உணவு பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள் உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், காகித குவளைகள், தேநீர் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், பைகள் (எந்த தடிமனாக இருப்பினும்), நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், சேமித்தல், வினியோகம் மற்றும் எடுத்து செல்லுதல், விற்பனை, வினியோகம் செய்வதற்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

எனவே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும். இந்த பொருட்களை இறக்குமதி செய்தல், இருப்பு வைத்தல், வினியோகம் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்துவோர் மீது உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை திறம்பட செயல்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். இந்த கட்டுப்பாட்டு அறை அனைத்து அலுவலக நாட்களிலும் வருகிற 31-ந்தேதி வரையில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை தொடர்பான பல்வேறு பங்குதாரர்களால் கோரப்படும் உதவி, வழிகாட்டுதல், தெளிவுப்படுத்துதல் மற்றும் தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story