கெங்கை அம்மன் சிரசு ஊர்வலத்திற்கு தடை


கெங்கை அம்மன் சிரசு ஊர்வலத்திற்கு தடை
x

இன்று நடைபெற இருந்த கெங்கை அம்மன் சிரசு ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

வேலூர்

கே.வி.குப்பம் அருகே கீழ்ஆலத்தூர் கெங்கையம்மன் கோவில் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இந்த விழா நடத்துவதற்கு இருதரப்பினரும் ஒரேநேரத்தில் போட்டியிட்டனர். இதனால் இருதரப்பினரில் திருவிழாவை யார் நடத்துவது? என்று கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கே.வி.குப்பம் தாலுகா அலுவலகத்தில் அமைதி குழுக் கூட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட பயிற்சி சப்-கலெக்டர் மோ.பிரியா தலைமை தாங்கினார். தாசில்தார் அ.கீதா முன்னிலை வகித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு கே.ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, தலைமை இடத்து துணை தாசில்தார் வடிவேலு, மண்டல துணை தாசில்தார் பா.சங்கர், வருவாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் மணிவாசகம், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கோவில் விழா குழுவினரில் இருதரப்பைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு சுற்றுகளாக நீண்ட நேர பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு குழுவினரும் சேர்ந்து வழக்கம்போல் விழா நடத்துவது என்றும், அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாகவும், அமைதியாகவும் விழா கொண்டாடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதே நேரத்தில் திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து, கெங்கையம்மன் கோவிலுக்கு அம்மன் சிரசை ஊர்வலமாக கொண்டு வரக்கூடாது. இதற்காக விரதம் இருந்து வந்தவர், அம்மன் சிரசை தலையில் சுமந்து கொண்டு வரலாம். மற்றபடி ஊர்வலமாகக் கொண்டு வருவதற்கு மட்டும் அனுமதி இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இதை இருதரப்பாரும் ஏற்றுக்கொண்டு விழா நடத்த ஒப்புக்கொண்டனர்.


Next Story