தடாக நந்தீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடத்த தடை
தடாக நந்தீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடத்த தடை
வேதாரண்யம் தடாக நந்தீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தடாக நந்திகேஸ்வரர் கோவில்
நாகை மாவட்டம் வேதாரண்யம்- நாகை சாலையில் வேதாமிர்த ஏரி உள்ளது. இந்த ஏரி ரூ.7.30 கோடியில் தூர்வாரப்பட்டு சுற்றுச்சுவர் அமைத்து, நடைப்பயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஏரியின் நடுவில் முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஓ.எஸ்.மணியன் தனது சொந்த செலவில் தடாக நந்திகேஸ்வரர் கோவில் கட்டி கொடுத்தார். இக்கோவிலில் இன்று(திங்கட்கிழமை) காலை குடமுழுக்கு நடைபெற இருந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
நேற்று அறநிலையத்துறையினர் தடாக நந்திகேஸ்வரர் கோவில் குடமழுக்கு விழாவுக்கு முறையாக அனுமதி வாங்கவில்லை என கூறி குடமுழுக்கு நடத்த கூடாது எனவும் திருப்பணி குழுவுக்கு ேநாட்டீஸ் அனுப்பினர். இதைத்தொடர்ந்து வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் பேபி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
போலீஸ் பாதுகாப்பு
இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், நகராட்சி ஆணையா் வெங்கடலட்சுமணன், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., வக்கீல்கள் சுப்பையன், கிரிதரன், நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையில் உரிய அனுமதி பெற்று குடமுழுக்கு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
கோவில் குடமுழுக்கு விழாவுக்கு தடை விதித்ததை கண்டித்து நேற்று ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு யாகசாலையில் வைக்கப்பட்டு இருந்த கலசங்களை பக்தர்களுக்கு வழங்கி அங்குள்ள விநாயகருக்கு தேங்காய் உடைத்துவிட்டு கலைந்து சென்றனர்.