குழித்துறை தடுப்பணையில் பொதுமக்கள் நடந்து செல்ல தடை
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பாய்கிறது. இதனால், குழித்துறை தடுப்பணை வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை:
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு வெள்ளம் பாய்கிறது. இதனால், குழித்துறை தடுப்பணை வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பரவலாக மழை
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமையான தட்ப-வெப்ப நிலை நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் மாலையில் இருந்து நள்ளிரவு வரை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் பகுதியில் நேற்று பகலில் மழை இல்லை. மதியம் வெயில் காணப்பட்டது. மாலையில் இருள்சூழ்ந்து எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்ற நிலை நிலவியது.
மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாய்கிறது. இந்த வெள்ளம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை மூழ்கடித்து செல்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பணை வழியாக யாரும் செல்லாதவாறு கம்பியால் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.
மழை அளவு
குமரியில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 69.2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை அணை- 57.6, பெருஞ்சாணி அணை- 27.6, புத்தன் அணை- 26.8, சிற்றாறு-1 அணை- 30.4, சிற்றாறு-2 அணை- 28.2, மாம்பழத்துறையாறு அணை- 26, முக்கடல் அணை- 17, பூதப்பாண்டி- 30.6, கன்னிமார்- 32.2, கொட்டாரம்- 16.2, குழித்துறை- 35.8, மயிலாடி- 20.8, நாகர்கோவில்- 2.4, சுருளோடு- 31.6, தக்கலை- 28.4, குளச்சல்- 12.2, இரணியல்- 26, பாலமோர்- 60.4, திற்பரப்பு- 65.7, ஆரல்வாய்மொழி- 7.2, கோழிப்போர்விளை- 50.4, அடையாமடை- 33.1, குருந்தங்கோடு- 42, முள்ளங்கினாவிளை- 25.4, ஆனைகிடங்கு- 22.4 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.