நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை:கடலூர் மாவட்டத்தில் 1600 போலீசார் பாதுகாப்பு84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு


நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை:கடலூர் மாவட்டத்தில் 1600 போலீசார் பாதுகாப்பு84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தில் 1600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

கடலூர்

2022-ம் ஆண்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு விடைபெற்று, 2023--ம் ஆண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் தயாராகி விட்டனர். இதையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதாவது, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 2 உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 33 போலீஸ் இன்ஸ் பெக்டர்கள், 231 சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 1600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

84 தற்காலிக சோதனைச்சாவடிகள்

மேலும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்க வகையில் மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் கூடுதலாக, கடலூர் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன தணிக்கை செய்கின்றனர்.

போலீசார் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடஉள்ளனர். தங்கும் விடுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்துவார்கள். முக்கியமான இடங்களில் இரு சக்கர வாகனங்களில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபடுவார்கள்.

வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

கோவில்கள், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களான தேவனாம்பட்டினம் சில்வர் பீச், பிச்சாவரம் சுற்றுலா மையம், சாமியார் பேட்டை கடற்கரை ஆகிய இடங்களின் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும். இன்று (சனிக்கிழமை) இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் கூடுவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ வேண்டும்.

நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்படுகிறது. மது அருந்து விட்டு வாகனம் ஓட்டுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story