பாலக்கோடு ஒன்றியத்தில் ரூ.32 கோடியில் புதிய தடுப்பணை, கால்வாய் அமைக்கும் திட்டம்
பாலக்கோடு ஒன்றியத்தில் ரூ.32 கோடியில் புதிய தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
பாலக்கோடு:
பாலக்கோடு ஒன்றியத்தில் ரூ.32 கோடியில் புதிய தடுப்பணை மற்றும் கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டு விழா
பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி கிராமத்தில் நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.30.38 கோடி மதிப்பிட்டில் ஜெர்த்தலாவ் கால்வாயில் இருந்து 12 ஏரிகளுக்கு சின்னாறு உபரிநீர் கொண்டு செல்ல புதிய கால்வாய் அமைக்கப்படுகிறது. திருமல்வாடி கிராமத்தில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் கேசர்குளி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது:-
கூட்டு குடிநீர்
தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் இந்த பகுதியில் சுமார் 432 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். கூடுதலாக ஆயிரத்து 572 டன் நெல், தானியங்கள், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படும். கெசர்குளி ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணி மூலம் 67 திறந்தவெளி, ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இந்த பகுதியில் உள்ள கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நல்ல வாய்ப்பாக இந்த தடுப்பணை அமையும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் 2-வது கட்ட திட்டத்தை ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும். காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் தர்மபுரி மாவட்டம் செழுமையாக மாறும். மாவட்டத்தில் சிப்காட் திட்டம் தொடங்கப்பட்டு விரைவில் பொருளாதாரத்தில் செழிப்பான மாவட்டமாக மாற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி, முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர், உதவி கலெக்டர் சித்ராவிஜயன், வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா, பேரூராட்சி தலைவர்கள் முரளி, வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.