பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின் சக்தி தயாரிக்க திட்டம்
பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின் சக்தி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் நெய்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் கூறினார்.
நெய்வேலி:
நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் சார்பில் கொண்டாடப்பட்டது. பாரதி விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைவர் ராகேஷ்குமார், தேதிய கொடி ஏற்றினார். பின்னர் அவர், ஜீப்பில் சென்று அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
மனிதவளத்துறை செயல் இயக்குனர் என்.சதீஷ்பாபு வரவேற்றார். இதில் மின்துறை இயக்குனா் ஷாஜி ஜான், திட்டமிடல் மற்றும் செயலாக்கத்துறை இயக்குனர் மோகன், சுரங்கத்துறை இயக்குனார் சுரேஷ் சந்திர சுமன், கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி சந்திரசேகா், மத்திய தொழிலக பாதுகாப்புப்படையின் துணை தலைவர் திக்விஜய்குமார் சிங், என்.எல்.சி. அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டில் முதலிடம்
விழாவில் நிறுவன தலைவர் ராகேஷ்குமார் பேசியதாவது:-
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனத்தையும் சோ்த்து ரூ.568 கோடியே 83 லட்சம் நிகரலாபத்தை பெற்றுள்ளது. முந்தைய ஆண்டின் முதல் காலாண்டை விட இது 59.07 சதவீதம் அதிகம்.
2021-22-ம் நிதியாண்டில் நெய்வேலி முதல் அனல் மின்நிலைய விரிவாக்கம், பழுப்பு நிலக்காியில் இயங்கும் அனல் மின்நிலையங்களில் நாட்டில் முதலிடத்தையும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மின் நிலையங்களில் நாட்டில் 2-வது இடத்தையும், நாட்டின் அனைத்து அரசு மற்றும் தனியார் அனல் மின் நிலையங்களில் 7-வது இடத்தையும் பெற்றுள்ளது.
புதிய சாதனை
என்.எல்.சி. இந்தியா நிறுவன மின் நிலையங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 696 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரம் யூனிட் மின் உற்பத்தி செய்து நிறுவன வரலாற்றில் ஒரு காலாண்டில் அதிகபட்ச மின் உற்பத்தி என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.
கடந்த 2021-22-ம் நிதியாண்டில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மத்திய அரசிற்கு ரூ.1487 கோடியும், தமிழகத்திற்கு ரூ.460 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. உற்பத்தி செய்யும் மொத்த மின்சக்தியில் அதிகபட்ச பங்காக தமிழகத்திற்கு 55 சதவீதம் வழங்கப்பட்டு வருகிறது.
ஹைட்ரஜன் வாயு மூலம் மின் சக்தி
மின் உற்பத்தி மணிக்கு 60 லட்சத்து 61 ஆயிரத்து 60 யூனிட்டாகவும் (6061.06 மெகாவாட்), சுரங்க உற்பத்தி அளவு ஆண்டிற்கு 5 கோடியே 26 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியாகவும் உயர்ந்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அதிக மின்தேவையின் காரணமாக உருவான நிலக்காி தட்டுப்பாட்டை சாிசெய்திட, மத்திய அரசுக்கு உதவிடும் வகையில், ஒடிசா மாநிலம், தலபிரா நிலக்காி சுரங்கத்தில் இருந்து தேசிய அனல் மின் நிறுவனத்திற்கு சொந்தமான 5 மின்நிலையங்களுக்கு நிலக்கரி வழங்கி வருகிறது.
புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையின் மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய மின் சக்தியின் அளவினை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு ஹைட்ரஜன் வாயு மூலம், பசுமை மின்சக்திஉற்பத்தி செய்ய முக்கியத்துவம் வழங்கி வருகிறது. அந்த வகையில் என்.எல்.சி. இந்தியா நிறுவனமும் மின் உற்பத்தி துறையில் நவீன தொழில்நுட்பமான பசுமை ஹைட்ரஜன் வாயு மூலம் மின் சக்தி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஆய்வுப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.