சமூக வலைதளங்கள் மூலமாக மக்களை சந்திக்க திட்டம்: விஜய் மக்கள் இயக்க ஐ.டி. பிரிவினர் ஆலோசனை கூட்டம்
சமூக வலைதளங்கள் மூலமாக மக்களை சந்திக்கும் வகையில், விஜய் மக்கள் இயக்க ஐ.டி. பிரிவினர் ஆலோசனை கூட்டம் வருகிற 26-ந்தேதி சென்னை பனையூரில் நடைபெறுகிறது.
சென்னை,
சினிமாவில் முத்திரை பதித்த நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கிறது. அதை மெய்ப்பிக்கும்படியே நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்ற செயல்பாடுகளில் தனது மக்கள் இயக்கத்தினரை எழுச்சியுடன் ஈடுபட வைத்து வருகிறார், விஜய்.
சமீபத்தில் கூட 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்தார். ஏழை மாணவர்களுக்காக இலவச இரவு நேர படிப்பகங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனாலேயே அவரது அரசியல் வருகைக்கு வெகு சீக்கிரம் விடை கிடைத்துவிடுமோ... என அரசியல் நோக்கர்கள் கருதி வருகிறார்கள்.
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சமூகசேவைகளிலும், கல்வி சார்ந்த பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும் விஜய், மக்கள் இயக்கப்பணிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அதன் ஒரு கட்டமாக இயக்கத்தின் பணிகள் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து அடிக்கடி ஆலோசனை நடத்தியும் வருகிறார். சமீபத்தில் அமைப்பின் வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்தநிலையில் அமைப்பின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்தக்கூட்டத்தில் மக்கள் இயக்க செயல்பாடுகளை பேஸ்புக், டுவிட்டர், யூ-டியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக மாவட்டம், இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, வக்கீல் அணி, மகளிரணி, வர்த்தக அணி, விவசாய அணி, தொழிற்சங்க அணி, ஊடக அணி, மற்றும் நகரம், ஒன்றியம், வார்டு, பகுதி, கிளை, பூத் கமிட்டி உறுப்பினர் வரை கொண்டு செல்வது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த கூறியதாவது:-
பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுடன்...
மக்கள் இயக்க செயல்பாடுகளை சமூக வலைதளங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தக்கூட்டத்தில் தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிக்காக பரிந்துரை செய்த 3 நபர்களை தவறாமல் ஆலோசனை கூட்டத்திற்கு அழைத்து வருமாறு தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் அரசியல் களத்தில் கவனம் ஈர்க்க தொடங்கியிருக்கிறது.