ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

மத்தூர்:

மத்தூர் அருகே சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூ.3 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.

திட்டப்பணிகள்

மத்தூர் அருகே உள்ள சாலமரத்துப்பட்டி ஊராட்சியில் ஜண்டா மேடு முதல் புலியூர் சாலமரத்துப்பட்டி காலனி வரை சாலை வலுப்படுத்தும் பணி, போச்சம்பள்ளி கல்லாவி சாலை முதல் பொடார் வரையுள்ள சாலை, புலியூர் முதல் முருகப்பட்டி சாலையை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறை கட்டிடம் உள்பட 27 வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.3 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழா நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். செல்லக்குமார் எம்.பி., மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பேசினார். ஊராட்சியில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் விரைவாக முடிக்கப்படும். இந்த பணிகள் முடிந்தவுடன் சாலமரத்துப்பட்டி ஊராட்சி முற்றிலுமாக மேம்படுத்தப்பட்ட ஊராட்சியாக உருவாகும் என அமைச்சர் கூறினார்.

தலைமை ஆசிரியைக்கு பாராட்டு

தொடர்ந்து ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று கிராம சபை கூட்டத்தில் குறைகளை சுட்டிக்காட்டிய தலைமை ஆசிரியை சக்தியை மேடைக்கு அமைச்சர் அழைத்தார். இது தி.மு.க. ஆட்சி. இங்கு யார் குறைகளை கூறினாலும், அதை களைய முயற்சி செய்வோம். நீங்கள் சொன்ன குறைகளை களைய உரிய நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம். இருப்பினும் குறை கூறிய உங்களை நாங்கள் கவுரவிக்க ஆசைப்படுகிறோம் என்று கூறி அந்த தலைமை ஆசிரியைக்கு அமைச்சர் காந்தி சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் நரசிம்மன், டாக்டர் தென்னரசு, ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story