ரூ.96½ கோடியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப்பணிகள்
சேலம் பழைய பஸ் நிலையத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.96½ கோடியில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
சேலம் பழைய பஸ் நிலையத்தில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.96½ கோடியில் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
பழைய பஸ் நிலையம்
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.96½ கோடியில் சேலம் பழைய பஸ் நிலையம் மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அங்கு தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம், மேற்கூரை தளம் ஆகியவற்றின் மொத்த பரப்பளவு எவ்வளவு?, தினமும் வந்து செல்லும் பஸ்களின் எண்ணிக்கை, வணிக உபயோகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பரப்பளவு குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து பஸ்கள் நிறுத்துவதற்கான வசதி, கடைகளின் எண்ணிக்கை, வணிக உபயோகம் குறித்தும் கேட்டனர். பஸ் நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு நடத்தினர்.
மின் விளக்கு
தொடர்ந்து திருமணிமுத்தாற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்தின் நீளம், பஸ்கள் பாலத்தில் செல்வதற்கு அகலம் போதுமானதாக உள்ளதா?, பாலத்தின் இருபுறமும் கைப்பிடி சுவர் அமைத்து பஸ்கள் பாதுகாப்பாக சென்றுவரவும், அடுக்குமாடி பஸ் நிலையத்திற்கு செல்லும் பொதுமக்கள் இடையூறு இன்றி பாலத்தில் செல்வதற்கு போதுமான நடைபாதை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதை பார்வையிட்டனர்.
அப்போது பாலத்தின் இருபுறமும் உள்ள கைப்பிடி சுவர்களில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும். மேலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
தொடர்ந்து ரூ.10 கோடியே 58 லட்சத்தில் போஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டனர். அங்கு மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து, இரவு நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் கூறினர். இந்த ஆய்வின் போது மாநகராட்சி பொறியாளர் ரவி, செயற்பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.