ரூ.10¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
ஏற்காட்டில் ரூ.10¾ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஏற்காட்டில் ரூ.10¾ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
ஏற்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
மலைவாழ் மக்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், கொட்டச்சேடு முதல் கே.நார்த்தஞ்சேடு வரை 2½ கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கப்படுகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சத்திலும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சத்திலும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13 லட்சத்திலும், பொது நிதியின் கீழ் ரூ.2 கோடியே 36 லட்சத்திலும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4 கோடியிலும் என பல்வேறு பணிகள் நடைபெறுகிறது.
கிராமப்புற நூலகங்கள்
மேலும், பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்தில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 69 ஆயிரத்தில் 3 பணிகளும் நடக்கிறது.
புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 55 லட்சத்தில் 5 பணிகளும் உள்பட இந்த நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10¾ கோடியில் 222 வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வின்போது ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவி பொறியாளர் சதீஷ் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.