சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை
சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எம்.பழனி தெரிவித்தார்.
சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு எம்.பழனி தெரிவித்தார்.
பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக எம்.பழனி இன்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்களில் போலியான வலைத்தள பக்கங்கள் மூலமாகவோ, ஓ.டி.பி. மூலமாகவோ அல்லது இணைய வழியில் வேறு வகையிலோ பணம் திருட்டு உள்ளிட்ட சைபர் கிரைம் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
பெண்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும்.
செல்போன் எண்ணிற்கு கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளது போல் வரும் தேவையற்ற இணையதள லிங்க்கை திறந்து பார்க்க வேண்டாம். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்களில் செல்போன் எண்ணிற்கு எவரேனும் பேசி ஓ.டி.பி. எண்ணை கேட்டால் கொடுக்க கூடாது.
எந்த ஒரு லோன் ஆப் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அதில் ஆதார், பான் கார்டு, புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றக் கூடாது. ஆன்லைனில் வரும் லிங்க்கை பயன்படுத்தி அதில் முதலீடு செய்து பணத்தை இழக்க வேண்டாம்.
உடனடியாக நடவடிக்கை
முக்கியமாக வங்கி கணக்கு எண், கிரடிட் கார்டு எண், ஏ.டி.எம். கார்டு எண், ஏ.டி.எம். கார்டு ரகசிய எண் ஆகியவற்றை யாரிடமும் பகிர கூடாது. மேலும் எந்த ஒரு இணையதளத்திலும் ஆன்லைனில் வேலைக்காக பணம் செலுத்த வேண்டாம்.
பேஸ்புக்கில் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் பிரண்டு ரிக்வஸ்ட் தொடர்புகளை இணைத்து கொள்ள வேண்டாம்.
இணையதள பண மோசடி புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 என்பதை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். மேலும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் திருவண்ணாமலையில் சைபர் கிரைம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தற்போது அதிநவீன மென்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் சைபர் கிரைம் குற்றங்கள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக முதியவர்கள் தெரியாத நபர்களிடம் ஏ.டி.எம். கார்டுகளையோ, ரகசிய எண்ணை தெரிவிக்க வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாமல் உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும்.
சைபர் கிரைம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.