பொதுமக்களின் குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கைபுதிய கலெக்டர் ஸ்ரீதர் பேட்டி
அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்:
அனைத்து துறை அலுவலர்களுடன் இணைந்து பொதுமக்களின் குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
52-வது கலெக்டர்
குமரி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த அரவிந்த் மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட புதிய கலெக்டராக சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்ட இயக்குனராக பணியாற்றிய பி.என்.ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். இவர் குமரி மாவட்டத்தின் 52-வது கலெக்டர் ஆவார்.
குமரி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் 2 நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து அவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் பணிமாற்றம் செய்யப்பட்ட கலெக்டர் அரவிந்த் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
பின்னர் புதிய கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முன்னுரிமை
குமரி மாவட்டத்தில் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் அனைத்தும் இன்னும் சிறப்பாக செயல்படுத்த தனி கவனம் செலுத்தப்படும். அதே நேரத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அனைத்துத்துறை அலுவலர்களுடன் இணைந்து உடனடி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வளர்ச்சி பணிகள், மக்கள் சேவை, குறைதீர்க்கும் பணிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் தனிக் கவனம் செலுத்தி அவற்றிற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள், அனைத்துத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் குமரி மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றுவதற்கு முழு முயற்சி மேற்கொள்வேன். குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் நகர்ப்புற பகுதிகள் அதிகம். எனவே நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம், சுற்றுலா, மீனவர்கள் உள்ளிட்ட துறைகளின் திட்டங்கள், பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த துறைகளின் திட்டங்கள் சம்பந்தப் பட்டவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழில்தட திட்டப்பணி
சென்னை-கன்னியாகுமரி தொழில்தட திட்ட பேக்கேஜ் பணிகள் தற்போது நெல்லை, தென்காசி மாவட்டப் பகுதிகளில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்த திட்ட வேலைகள் எடுக்கப்படவில்லை. தொடக்க நிலையில் தான் இருந்து வருகிறது. அடுத்த கட்டத்தில் குமரி மாவட்டத்தில் இதற்கான பணிகள் எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய கலெக்டருக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய 4 மொழிகள் தெரியும். இவர் திண்டிவனத்தில் உதவி கலெக்டராக 2 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். சென்னை மாநகராட்சி மத்திய வட்டார இணை இயக்குனராகவும் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி நாகராஜன், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியன் (குற்றவியல்), ஜூலியன் ஹீவர் (பொது) உள்பட பலர் கலந்து கொண்டனர்.