சிறப்பு குறைதீர்வு முகாமில் 301 மனுக்களுக்கு உடனடி தீர்வு
வேலூர் மாவட்டத்தில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் பெறப்பட்ட 309 மனுக்களில் 301 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைதீர்வு முகாம்
பொது வினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் வழங்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற்றது.
அதன்படி வேலூர் மக்கான் அம்பேத்கர் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் நடந்த சிறப்பு குறைதீர்வு முகாமிற்கு வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் பூமா தலைமை தாங்கினார். 17-வது வார்டு கவுன்சிலர் காஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, வருவாய் அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் என்று 76 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 74 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்த 2 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.
301 மனுக்களுக்கு உடனடி தீர்வு
இதேபோன்று காட்பாடி தாலுகா கொக்கேரியில் நடந்த முகாமில் 58 மனுக்களும், அணைக்கட்டு தாலுகா குட்டப்பள்ளியில் நடந்த முகாமில் 44 மனுக்களும், குடியாத்தம் தாலுகா பாக்கத்தில் நடந்த முகாமில் 56 மனுக்களும், கே.வி.குப்பம் தாலுகா கீழுரில் நடந்த முகாமில் 28 மனுக்களும், பேரணாம்பட்டு தாலுகா பங்களாமேட்டில் நடந்த முகாமில் 47 மனுக்களும் என்று மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் நடந்த பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாமில் 309 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 301 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 8 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. முகாமில்
அதிகபட்சமாக 86 பேர் தங்களின் செல்போன் எண்ணை மாற்றவும், 83 பேர் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கவும், 75 பேர் குடும்ப தலைவர் பெயர் மாற்றவும் மனு அளித்தனர் என்று மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.