வெளிநாடுகளுக்கு செல்லும்போது முறையாக பதிவு செய்ய வேண்டும்


வெளிநாடுகளுக்கு செல்லும்போது முறையாக பதிவு செய்ய வேண்டும்
x

தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது முறையாக பதிவு செய்து செல்ல வேண்டும் என அமைச்சர் ெசஞ்சி மஸ்தான் கூறினார்.

திருவாரூர்

ஆலத்தம்பாடி:

தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது முறையாக பதிவு செய்து செல்ல வேண்டும் என அமைச்சர் ெசஞ்சி மஸ்தான் கூறினார்.

பேட்டி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பில் முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சால்வை அணிவித்து வரவேற்றார்.

பின்னர் தர்காவில் அமைச்சர் பிரார்த்தனை செய்தார். பின்னர் அமைச்சர் ெசஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பராமரிப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினர் நலன் காக்கின்ற வகையில் அவர்களது வழிபாட்டு தலங்களை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி பல்வேறு மாவட்டங்களில் உள்ள தர்காக்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக பள்ளிவாசல்கள் பராமரிப்புக்காக ரூ.6 கோடியும், தேவாலயங்கள் பராமரிப்புக்காக ரூ.6 கோடியும், தர்காக்கள் பராமரிப்புக்காக ரூ.6 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

சுற்றுலா விசாவில் செல்கின்றனர்

தமிழகத்தில் இருந்து அதிகமானோர் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி உரிய முறையில் பதிவு செய்யாமல் செல்கின்றனர். மேலும் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு சென்று உரிய காலத்துக்குள் திரும்பாமல் பணியில் சேர்ந்து சிக்கி விடுகின்றனர்.

வெளிநாடுகளில் தமிழர்கள் உயிரிழந்தால் அவர்களின் உடல்களை பெற 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை ஆகும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான ஒரு துறையை உருவாக்கி அதற்கு என்னை பொறுப்பாளராக நியமித்துள்ளார்.

முறையாக பதிவு செய்ய வேண்டும்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி அண்மையில் வெளிநாட்டில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை விரைவாக மீட்டு தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் தொழிலாளியின் கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது முறையாக பதிவு செய்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன். மாரிமுத்து எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் கீர்த்தனா, திருத்துறைப்பூணடி தாசில்தார் மலர்கொடி, ஜாம்புவானோடை ஊராட்சி மன்ற தலைவர் லதா பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story