தங்கும் விடுதியில் இளம்பெண்களை வைத்து விபசாரம்
ஊட்டியில் தங்கும் விடுதியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஊட்டி
ஊட்டியில் தங்கும் விடுதியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்திய மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தங்கும் விடுதியில் விபசாரம்
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே முட்டிநாடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 43). இவர் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் தங்கும் விடுதி வைத்து நடத்தி வருகிறார். இந்த விடுதியில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியை சேர்ந்த அபூபக்கர் சித்திக் (47) என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
இதற்கிடையே தங்கும் விடுதியில் கடந்த சில நாட்களாக இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வருவதாக ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் வனக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தங்கும் விடுதிக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
3 பேர் கைது
அப்போது அங்குள்ள அறைகளில் 2 இளம்பெண்கள் மற்றும் அவர்களுடன் ஆண்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அபூபக்கர் சித்திக் விடுதியில் இருந்து தப்பி ஓட முயன்றார். உடனடியாக போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அசோக்குமார், அபூபக்கர் சித்திக் 2 பேரும் சேர்ந்து தங்கும் விடுதியில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்ததும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை இருவரும் சரி பாதியாக பிரித்துக்கொண்டதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அபூபக்கர் சித்திக் மற்றும் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய நஞ்சநாட்டை சேர்ந்த வினோத், உல்லத்தி பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் தங்கும் விடுதி உரிமையாளரான அசோக்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.