ஓட்டலில் சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது


ஓட்டலில் சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரத்தில் ஓட்டலில் சப்ளையரை தாக்கிய புரோட்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

கயத்தாறு அருகே உள்ள கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் சரவணன் (வயது 44). இவர் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் விலக்கு அருகே உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். அதே ஓட்டலில் கரடிகுளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பால்பாண்டி (48) என்பவர் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை முடிந்தவுடன் தினமும் மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு தூங்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த கட்டிலில் யார் படுத்து தூங்குவது என இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் சத்தம் போட்டு சமாதானம் செய்து வைத்தனர். அதனால் இவர்கள் மதுபோதையில் அப்படியே தூங்கிவிட்டனர்.

பின்னர் மீண்டும் அதிகாலையில் கட்டிலில் படுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் போதை தலைக்கேறிய பால்பாண்டி, அங்கிருந்த செங்கலை எடுத்து சரவணனை தாக்கியுள்ளார். இதில் காயத்துடன் மயங்கி கிடந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து சரவணனின் சகோதரர் முருகன் எட்டயபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.


Next Story