முட்டையிட கடற்கரைக்கு வரும் ஆலிவ்ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வேண்டும்


முட்டையிட கடற்கரைக்கு வரும் ஆலிவ்ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2023 6:45 PM GMT (Updated: 19 Feb 2023 6:45 PM GMT)

முட்டையிட கடற்கரைக்கு வரும் ஆலிவ்ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என வன ஆராய்ச்சியாளர் அறிவுறுத்தி உள்ளார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

முட்டையிட கடற்கரைக்கு வரும் ஆலிவ்ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என வன ஆராய்ச்சியாளர் அறிவுறுத்தி உள்ளார்.

விழிப்புணர்வு முகாம்

பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமத்தில் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு சீர்காழி வனச்சரகர் ஜோசப் டேனியல் தலைமை தாங்கினார். இதில் இளநிலை வன ஆராய்ச்சியாளர் தீபா ஜெயராமன் கலந்து கொண்டு கடல் ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகை ஆமை இனமான ஆலிவ்ரெட்லி ஆமைகள், இந்த பகுதியில் உள்ள கடற்கரை பகுதிக்கு வந்து முட்டைகள் இடுவதற்கான பருவ காலமாகும். அவ்வாறு முட்டையிட வரும் ஆமைகளை கண்டறிந்து அவற்றின் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான மடவாமேடு, வானகிரி, கூழையாறு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

பாதுகாக்க வேண்டும்

இந்த பருவத்தில் இதுவரை 12 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. முட்டையிடுவதற்காக கடற்கரைக்கு வரும் ஆமைகளை வன விலங்குகள் மற்றும் சமூக விரோதிகளிடமிருந்து எந்த இடையூறும் ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும். ஆமை முட்டைகள் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் கடல் வளத்தை பாதுகாக்கவும் கடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் மீன்வளம் அதிகரிக்கவும் இந்த ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். முகாமில் மீனவ பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story