சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும்
சதுப்பு நிலங்களை பாதுகாக்க வேண்டும்
கோத்தகிரி
நீலகிரி மாவட்டத்தில் சதுப்பு நிலங்கள் உள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும், அதை மீட்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி லாங்வுட் சோலை பாதுகாப்புக்குழு செயலாளரும், நீராதாரங்கள் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளருமான கே.ஜே.ராஜூ கூறியதாவது:-
சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக கூறி சமீபத்தில் சில கிராமங்களில் விவசாயிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். இதேபோன்று நீண்ட காலமாக அரசு சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ள பிறரையும் அரசு நிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். கோத்தகிரி அருகே உள்ள ரைபிள் ரேஞ்சு சதுப்பு நிலத்தின் ஒரு பகுதியில உரிய அனுமதியின்றி ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டு உள்ளது. கோத்தகிரி பகுதியில் உள்ள கால்ப்லிங்ஸ் பகுதி, அரசுக்கு சொந்தமான புல்வெளியாக இருந்தது. ஊட்டி குதிரைப்பந்தய மைதானமும் அரசு சதுப்பு நிலம்தான். இது போன்ற சதுப்பு நிலங்களை மீட்டெடுப்பதில் அரசு முனைப்பு காட்ட வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.