தேன்கனிக்கோட்டை அருகேதலையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்


தேன்கனிக்கோட்டை அருகேதலையில் தேங்காய் உடைத்து விவசாயிகள் போராட்டம்
தினத்தந்தி 31 July 2023 12:30 AM IST (Updated: 31 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூர் காய்கறி மார்க்கெட் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தில் நேற்று கொப்பரை தேங்காய்க்கு குறைந்தப்பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும், தேங்காய் டன்னுக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலையில் தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணை செயலாளர் சிவராஜ் தலைமையில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்தில் என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக விவசாயிகள் கோஷங்கள் எழுப்பினர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாகராணி, கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, இளைஞர் அணி துணை செயலாளர் நாராயணன், ஒன்றிய கவுரவ தலைவர் மரியப்பா, கெலமங்கலம் ஒன்றிய செயலாளர் பாபு, துணை செயலாளர் செல்வம் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story