திண்டுக்கல்லில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா
திண்டுக்கல்லில் ஊதிய உயர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தக்கோரி மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செந்தில்வேலன் முன்னிலை வகித்தார். இணை செயலாளர் தமிழ்குமரன் வரவேற்றார். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின்போது, தமிழக கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மேலும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பிரிவில் நேரடி நியமனத்துக்கு ஒதுக்கப்பட்ட 25 சதவீத பணியிடத்தை பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். கடந்த 2015-2016-ம் ஆண்டில் எஸ்.ஆர்.பி. மூலம் கூட்டுறவு வங்கிகளில் பணி அமர்த்தப்பட்ட உதவியாளர்களின் பணிமூப்பு பட்டியலை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.