நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டம்


நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டம்
x

மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் பழைய இடத்திலேயே இயங்க வேண்டும் என வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

நாமக்கல்:

தர்ணா போராட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலக முதன்மை கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடுதல் கட்டிடத்திற்கு மாற்றினர். அப்போது மாற்றுத்திறனாளிகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதால், முதன்மை கட்டிடத்தில் ஒரே ஒரு அறை மட்டும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறுவதற்காக மாற்றப்பட்டது. ஏற்கனவே இருந்தது போல மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் 3 அறைகளில் முதன்மை கட்டிடத்தில் இயங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பழனிவேல் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய போராட்டம் இரவு வரை நீடித்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறி, போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

நேர்முக தேர்வு

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள், தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்குவதற்கான நேர்முக தேர்வு கூடுதல் கட்டிடத்தில் நடைபெற்று வருகிறது. இது சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் இருப்பதால் மாற்றுத்திறனாளிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே மீண்டும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முதன்மை கட்டிடத்தில் இயங்க வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றனர்.

மாலை 6 மணி அளவில் மழை கொட்டியது, அதையும் பொருட்படுத்தாமல், கொட்டும் மழையில் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இரவு 8 மணி அளவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரவு 8.30 மணி அளவில் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மாற்றுத்திறனாளிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story