நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்-150 பேர் கைது


நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்-150 பேர் கைது
x

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

நாமக்கல்:

மறியல் போராட்டம்

மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவை கைவிடக்கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நேற்று நடந்தது. நாமக்கல் மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் மணிவேல் போராட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் செயலாளர் குழந்தான் முடித்து வைத்தார்.

இந்த சாலை மறியல் போராட்டத்தின்போது மின் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். நூல் விலை உயர்வால் விசைத்தறி தொழில்கள் நலிவடைந்துள்ளது. சிறு, குறு விசைத்தறி தொழில்கள் அதிக அளவில் மூடப்பட்டு வருகின்றன. அதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

150 பேர் கைது

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை நாளுக்கு நாள் உயர்வதால், சாதாரண மக்கள் வாழ்க்கையை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். அதனால் அவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 44 பெண்கள் உள்பட 150 பேரை கைது செய்து, வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story