பாலக்கோடு அருகே அரசு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே அரசு டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

டாஸ்மாக் கடை

பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜெர்த்தலாவ் ஊராட்சி கூசிகொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் நிர்வாக மேலாளரிடம் மனு அளித்தனர்.

இந்தநிலையில் தற்போது கூசிகொட்டாய் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு தாலுகா அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

முற்றுகை

தாலுகா அலுவலகத்துக்கு தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர் வர தாமதமானது. இதனால் பொதுமக்கள் அங்கு சுமார் 2 மணி நேரம் காத்திருந்திருந்தனர். இந்தநிலையில் திடீரென ஆத்திரமடைந்த அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் கூசிகொட்டாய் பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அவர்கள் மனு கொடுக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். பொதுமக்களின் திடீர் முற்றுகை போராட்டம் காரணமாக பாலக்கோடு தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story