தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதாந்திர பிடித்தத்தொகையை ரூ.497 ஆக உயர்த்தியதை ரத்து செய்து மீண்டும் ரூ.350 ஆக பிடித்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு போக்குவரத்து ஓய்வுபெற்றோர் நல அமைப்பு மாநில துணை பொதுச்செயலாளர் பாலையா மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவமணி நன்றி கூறினார்.