தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி 3-வது நாளாக நீடித்த குடியேறும் போராட்டம்


தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி 3-வது நாளாக நீடித்த குடியேறும் போராட்டம்
x

தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி குடிசைகள் அமைத்து குடியேறி 3-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

தேனி

தேனி அருகே பஞ்சமி நிலத்தை மீட்கக்கோரி குடிசைகள் அமைத்து குடியேறி 3-வது நாளாக மக்கள் போராட்டம் நடத்தினர்.

குடியேறும் போராட்டம்

தேனி அருகே வடபுதுப்பட்டியில் பஞ்சமி நிலம் என்று கூறப்படும் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி, வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 19-ந்தேதி அப்பகுதியில் ஏராளமான மக்கள் குடிசைகள் அமைத்து குடியேறும் போராட்டம் நடத்தினர். வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

பகலில் அங்கேயே சமைத்து சாப்பிடுவதும், இரவில் பெண்களை அனுப்பிவிட்டு ஆண்கள் மட்டும் போராட்டத்தை தொடர்வதுமாக இருந்தது. 3-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். அங்கு நேற்றும் சில குடிசைகள் அமைக்கப்பட்டன. 80-க்கும் மேற்பட்ட தற்காலிக குடிசைகள் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதற்கிடையே மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஜெய்பீம் புரட்சிப்புலிகள் அமைப்பின் நிறுவன தலைவர் அருந்தமிழரசு மற்றும் நிர்வாகிகள், பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். வீடற்றவர்கள் மனு கொடுத்தால் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இருப்பினும் கலெக்டர் இதுகுறித்து விசாரணை நடத்தி, பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாலையில் போராட்டக்காரர்கள் தரப்பில் சிலர் மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்களிடம் கலெக்டர் முரளிதரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது சம்பந்தப்பட்ட பகுதியில் நிலம் அளவீடு பணிகள் மேற்கொண்டு, ஆக்கிரமிப்பு பகுதிகளில் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும், நிலமற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து தங்களின் போராட்டத்தை கைவிடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story