ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாய நிலங்களில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு-கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்


ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாய நிலங்களில் கால்வாய் அமைக்க எதிர்ப்பு-கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல விவசாய நிலங்களில் கால்வாய் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தப்பட்டது.

ரூ.56 கோடி திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ளது ஆழியாளம் அணைக்கட்டு. இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் தர்மபுரி மாவட்டம் தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்ல ரூ.56 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 12 ஏரிகள் பயன்பெறும்.

இதற்காக ஆழியாளம் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்ல வசதியாக கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணி விவசாய நிலங்கள் வழியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சம்பந்தப்பட்டவர்களின் விவசாய நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

கருப்புக்கொடி போராட்டம்

இந்தநிலையில் உத்தனப்பள்ளி அருகே உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்கள் வழியாக கால்வாய் அமைக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் தங்களது விவசாய நிலத்தில் கருப்புக்கொடியை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் உதவி கலெக்டர் தேன்மொழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அதிகாரிகள் போலீசார் உதவியுடன் விவசாய நிலத்தை அளவீடு செய்து, கல் பதிக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும் மாவட்ட கலெக்டரிடம் முறையிடுமாறு விவசாயிகளிடம் தெரிவித்து சென்றனர்.


Next Story