கிருஷ்ணகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர், அடுப்புடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர், அடுப்புடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சமையல் கியாஸ் சிலிண்டர், அடுப்புடன் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் தொகையை முழுமையாக வழங்கக்கோரி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் கஸ்தூரி, பார்வதி, கவிதா, மஞ்சுளா, மஞ்சு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தேவி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் வாசுதேவன் ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் சுஜாதா நன்றி கூறினார்.

அரசாணை

ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான தொகையை பில்லில் உள்ளது போல் முழுத்தொகையும் வழங்க வேண்டும். 2018-ம் ஆண்டு அங்கன்வாடி மைய பணிகளை செய்வதற்கு அரசு வழங்கிய செல்போன்கள் முற்றிலும் பழுதாகி உள்ளது. எனவே புதிய செல்போன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அரசாணையை அமல்படுத்தும் நிலையில், அங்கன்வாடி மையத்திலேயே உதவியாளரை வைத்து குழந்தைகளுக்கு உணவு சமைத்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். உள்ளூர் பணியிட மாறுதல், வெளியூர் பணியிட மாறுதல்களை 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்த வேண்டும்.

கோஷங்கள்

10 ஆண்டுகள் பணி முடித்த உதவியாளர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கலந்து கொண்டவர்கள் சமையஸ் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கியாஸ் அடுப்படை வைத்து கொண்டும் கோஷங்கள் எழுப்பினர். இதில், 250-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story