கிருஷ்ணகிரியில் பரபரப்பு: கருப்பசாமி கோவிலை இடிக்க பக்தர்கள் எதிர்ப்பு-சாலை மறியல்-போலீஸ் குவிப்பு


தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் கருப்பசாமி கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருப்பசாமி கோவில்

கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய மாரியம்மன் கோவில் அருகே உள்ள இடத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பசாமி கோவில் கட்டப்பட்டது.

இந்த கோவிலில் கீழ்புதூர், மேல்புதூர், ராஜாஜி நகர், லைன்கொள்ளை, செல்லாண்டி நகர், பெருமாள் நகர், ஆனந்த நகர், சோமார்பேட்டை, வெங்கடாபுரம், மேல்பட்டி, பூசாரிப்பட்டி, தண்ணீர்பள்ளம் உள்பட 18 கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். மேலும் விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

கோர்ட்டு உத்தரவு

கோவில் கட்டப்பட்டுள்ள நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமானது. கடந்த 2017-ல், இந்த நிலத்தின் ஒரு பகுதியான 4,807 சதுர அடியை, ஓசூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருக்கு ரூ.96 லட்சத்துக்கு வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்தது. அந்த இடத்தில் கோவில் உள்ளதால் நிலத்தை கையகப்படுத்துவதில் ராமச்சந்திரனுக்கு சிரமம் ஏற்பட்டதால், அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கோவிலை அப்புறப்படுத்தி நிலத்தை ராமச்சந்திரனிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதையடுத்து நிலத்தை கையகப்படுத்தி ராமச்சந்திரனிடம் ஒப்படைக்கும் பணி நேற்று தொடங்கியது.

200 போலீசார் குவிப்பு

இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில், 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 200 போலீசார் அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டார்கள்.

மேலும் கோவில் அருகே பக்தர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் அனைத்து புறங்களிலும் பேரிகார்டு வைத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட்டன.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் கோவிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, 18 கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் திடீரென கருப்பசாமி கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கோவில் தரப்பு மற்றும் ராமச்சந்திரன் தரப்பை சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அது தோல்வியில் முடிவடைந்தது.

சாலை மறியல்

இதையடுத்து மாலை 4.30 மணிக்கு கோவிலை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. அங்கிருந்த கருப்பசாமி சாமி உள்ளிட்ட சிலைகள் கடப்பாறையால் தோண்டி எடுக்கப்பட்டன. மேலும் பொக்லைன் எந்திரம் மற்றும் கிரேன் மூலம் கோவில் ஷெட்டுகளும் அகற்றப்பட்டன. பின்னர் சிலைகள் அனைத்தும் வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகே பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்ல முடியாததால் வாகன நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

இதையடுத்து பஸ் நிலையத்திற்கு செல்லும் அனைத்து பஸ்களும் மாற்று பாதையிலும், மற்ற வாகனங்கள் ராயக்கோட்டை மேம்பாலம் வழியாகவும் அனுப்பப்பட்டன.

கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியல் நடந்தது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டு பக்தர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த சாலை பரபரப்பாக காணப்பட்டது.


Next Story