தர்மபுரி சத்திரம் மேல்தெருவில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
தர்மபுரி:
தர்மபுரி சத்திரம் மேல்தெருவில் சாலையை உடனே சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தோண்டப்பட்ட சாலை
தர்மபுரி நகராட்சி 24-வது வார்டு சத்திரம் மேல் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே இருந்த சாலை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் இருந்த சாக்கடை கால்வாய்கள் சேதம் அடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டது. மேலும் அந்த வழியாக பொதுமக்கள் இருசக்கர வாகனத்திலோ, நடந்தோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த சாலை தோண்டப்பட்டு 15 நாட்களாகியும் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. தேங்கி கிடக்கும் கழிவுநீரை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை
இந்தநிலையில் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை சத்திரம் மேல் தெரு நுழைவு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., நகராட்சி சுகாதார அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் தவமணி, நகர அமைப்பு அலுவலர் ஜெயவர்மன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தோண்டப்பட்ட சாலையை உடனே சீரமைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாயை சீரமைத்து தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனே அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பரபரப்பு
இதனை அடுத்து அந்த தெருவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். பொதுமக்களின் இந்த கோரிக்கையை 3 நாட்களுக்குள் நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு நகராட்சி அதிகாரிகள் சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.