தர்மபுரியில் நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அம்பேத்கர் பணியாளர் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் சித்திரவேலு தலைமை தாங்கினார். மண்டல பொருளாளர் பிரசன்ன பிரகாஷ் வரவேற்று பேசினார். மண்டல கிடங்கு சுமை தூக்குவோர் பிரிவு தலைவர் முருகன், மண்டல இணை செயலாளர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்ட ஆலோசகர் தமிழினியன், மாநில பொதுச் செயலாளர் குமார் காந்தி, மாநில தலைவர் மதிவாணன், நிர்வாகிகள் மோகன், வசந்த், பாலமுருகன், பிரபாகரன், முருகன், ராமலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். சுமார் 4 ஆண்டுகளாக எந்த பணப்பயனும் இன்றி பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு, அடையாள அட்டை, தீபாவளி போனஸ் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். மண்டல அலுவலகத்தில் காலியாக உள்ள அறை ஒன்றை சங்க அலுவலமாக ஒதுக்கி தர வேண்டும். மத்திய அரசு அறிவித்துள்ளபடி அகவிலை படியை வழங்க வேண்டும். தமிழக அரசு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களை பட்டியல் படுத்தி அரசியல் குறுக்கீடுகளை தவிர்த்து, விதிமுறைகளை கடைப்பிடித்து அனைவருக்கும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் சங்க நிர்வாகி ராமலிங்கம் நன்றி கூறினார்.