சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்


சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
x

செம்பட்டி அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்தில், சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தற்போது மழை பெய்து வருவதால், சாலையே தெரியாதபடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் சாலையில் நடந்த செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் வடக்கு மேட்டுப்பட்டியில் உள்ள தெருக்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறிவிட்டன. மேலும் சில தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சேறும், சகதியுமான சாலைகளை சீரமைக்கக்கோரியும், தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரியும் வீரக்கல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வடக்கு மேட்டுப்பட்டி கிராம மக்கள் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. இதற்கு அக்கட்சியின் திண்டுக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் வடக்கு மேட்டுப்பட்டியில் சேறும், சகதியுமான சாலையில் நெல் நாற்றுகளை நட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் சாலையை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன், வடக்கு மேட்டுப்பட்டி கிளை செயலாளர் ஜெயக்குமார், கிளை தலைவர் ஆரோக்கியதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story