தேன்கனிக்கோட்டை அருகே கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு: ஆடு, மாடுகளுடன் மீண்டும் ஊரை காலி செய்த பொதுமக்கள்-போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆடு, மாடுகளுடன் மீண்டும் பொதுமக்கள் ஊரை காலி செய்தனர்.
கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமம் வழியாக செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் லாரிகள் செல்லும் போது எழும் தூசியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் அந்த கிராம மக்கள் கல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகம் உள்பட பல இடங்களில் மனு அளித்தனர். மேலும் லாரிகள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் தலைமையில் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் உரிய தீர்வு எட்டப்படவில்லை.
லாரிகள் படையெடுப்பு
இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி கொரட்டகிரி கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி ஓசூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் குடியேற சென்றனர். அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குதிரும்பினர்.
ஆனால் போலீசார் மற்றும் அதிகாரிகள் கூறியபடி கல் குவாரிகளை மூட உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும் சமாதான பேச்சுவார்த்தை கூட்டமும் நடத்தப்படவில்லை. இதனிடையே கல் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் ஏற்றி கொண்டு லாரிகள் மீண்டும் கிராமத்தின் வழியாக படையெடுத்தன.
மீண்டும் ஊரை காலி செய்தனர்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று 2-வது முறையாக மீண்டும் தங்களது ஊரை காலி செய்தனர். அவர்கள் ஆடு, மாடுகளை ஓட்டி கொண்டு சாலைகளில் நடந்து சென்றனர். அப்போது மழை பெய்ததால் குழந்தைகளுடன், நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் மூட்டை, முடிச்சுகளுடன் பொதுமக்கள் சென்றனர்.
பின்னர் அவர்கள் கிராமத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து, குடியேறினர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு வரை நீடித்தது
தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள், கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், லாரிகள் கிராமத்தின் வழியாக செல்வதை நிறுத்தினால் தான், இந்த இடத்தை காலி செய்வோம் என்றனர். மேலும் அதுவரை கொரட்டகிரி கிராமத்திற்கு செல்ல மாட்டோம் என்று கூறினர். இதனிடையே பொதுமக்களின் போராட்டம் காரணமாக கிராமத்தின் வழியாக லாரிகள் செல்வது நிறுத்தப்பட்டது. மேலும் பாதுகாப்புக்காக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டன. காலையில் தொடங்கிய பொதுமக்களின் போராட்டம் இரவு வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.