இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 29-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம்-தர்மபுரியில் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
தர்மபுரி:
தமிழக கவர்னரை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 29-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில செயலாளர் முத்தரசன் தர்மபுரியில் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தர்மபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜி-20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை அளிக்கிறது. ஆனால் இந்த ஜி-20 மாநாட்டு லோகோவில் பா.ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமான தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த லோகோவில் இருந்து தாமரை சின்னத்தை அகற்ற வேண்டும்.
இப்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவருக்கு அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற 24 மணி நேரத்தில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையரை நியமிப்பதில் ஏன் இந்த அவசரம்? என்று சுப்ரீம் கோர்ட்டு எழுப்பி உள்ள கேள்வி சாதாரணமானது அல்ல. மத்திய அரசின் இத்தகைய செயல்பாடு ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது.
போட்டி அரசாங்கம்
காசி தமிழ் சங்கம விழாவில் தமிழ் மொழியை மிகவும் பாராட்டி பேசிய பிரதமர் மோடி, தமிழ் மொழி வளர்ச்சிக்காக கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் நிதி ஆண்டு வரை ஒதுக்கிய தொகை ரூ.22 கோடி மட்டுமே. அதே நேரத்தில் பொதுமக்களிடம் பயன்பாட்டில் இல்லாத சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு ரூ.222 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறார். அரசியல் சாசனத்தின் படி செயல்பட வேண்டிய கவர்னர் தமிழக அரசு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
முற்றுகை போராட்டம்
கவர்னர் ஆ.என்.ரவியின் இத்தகைய செயல்பாடு ஏற்புடையதல்ல. இதனால் கவர்னரை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாநில குழு உறுப்பினர் நஞ்சப்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.