கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம்
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் ஆடுதுறையில் நடந்தது.
கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் ஆடுதுறையில் நடந்தது.
தனி மாவட்ட கோரிக்கை
கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக போராட்டங்களும் நடந்து வருகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்று 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து தற்போது 600 நாட்கள் ஆகியும் இதுவரை கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி முதல்-அமைச்சருக்கு 1 லட்சம் தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நேற்று ஆடுதுறையில் நடந்தது.
தபால் அட்டைகள்
போராட்டத்துக்கு கும்பகோணம் தனி மாவட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதை முன்னிட்டு கோரிக்கை எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் தபால் அட்டைகளுடன் ஊர்வலம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆடுதுறை தபால்நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் தபால் அட்டைகளை போட்டனர்.
இதில் பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், பா.ஜனதா மாவட்ட தலைவர் சதீஷ், வக்கீல் சங்க தலைவர் ராஜசேகர், தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் செல்வம், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ப.ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆடுதுறை வர்த்தக சங்க தலைவர் சண்முகம் வரவேற்றார்.
கோஷங்கள்
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், பட்டிமன்ற நடுவர் அழகு பன்னீர் செல்வம், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், குடந்தை வர்த்தக சங்க தலைவர் சேகர், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் மதிவிமல், ராம்குமார், த.மா.கா. பொறுப்பாளர்கள் முருகானந்தம், சந்தானம், தமிழ் மாநில தேசிய லீக் பொறுப்பாளர் ஹாஜாமைதீன், சமத்துவ மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், பா.ம.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த பந்தல் கணேசன், பேரூராட்சி கவுன்சிலர் ம.க.பாலதண்டாயுதம் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். முடிவில் வர்த்தக சங்க செயலாளர் ராஜாராமன் நன்றி கூறினார்.