வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதை எதிர்த்து தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி


வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதை எதிர்த்து தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 9 Jan 2023 12:30 AM IST (Updated: 9 Jan 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் வாடகைக்கு இருந்த வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதை எதிர்த்து தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் வாடகைக்கு இருந்த வெல்டிங் பட்டறையை அப்புறப்படுத்தியதை எதிர்த்து தாய்-மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெல்டிங் பட்டறை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் லால் பகதூர் சாஸ்திரி சாலை பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி கலைப்பொன்னி (வயது50). சிவராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து கலைப்பொன்னியின் மகன்கள் தில்லை அரசன் (24), காவிய தர்ஷன் (19) பொற்செல்வன் (18), மகள் திகழ்மதி (23) ஆகியோர் வெல்டிங் பட்டறையை கவனித்து வந்தனர்.

இந்த நிலையில் வெல்டிங் பட்டறை இயங்கி வந்த இடத்தை அதன் உரிமையாளர் வேறொரு நபருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்று விட்டார். அதை விலைக்கு வாங்கிய புதிய உரிமையாளர் பட்டறையை உடனடியாக காலி செய்யும்படி கூறி உள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

இதனை ஏற்காத கலைப்பொன்னி குடும்பத்தினர் வெல்டிங் பட்டறையை சிறிது காலம் நடத்த அனுமதி வேண்டி கும்பகோணம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெல்டிங் பட்டறை திடீரென இடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த வெல்டிங் தொழில் நடத்துவதற்கான பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த கலைப்பொன்னி மற்றும் அவருடைய மகன் காவிய தர்ஷன் ஆகியோர் பட்டறையை அப்புறப்படுத்தியதை எதிர்த்தும், அப்புறப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நேற்று லால் பகதூர் சாஸ்திரி சாலையில் நின்று கொண்டு தலையில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

போலீசார் சமாதானம் செய்ததை தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியை அவர்கள் கைவிட்டனர். இதையடுத்து தாயும், மகனும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் கலைப்பொன்னியின் மற்றொரு மகன் பொற்செல்வன், மகள் திகழ்மதி ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி, சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் கலைப்பொன்னி மற்றும் அவருடைய மகன்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கும்பகோணத்தில் தாயும், மகனும் தீக்குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story