ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி சிறுவன் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்-தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு


ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி சிறுவன் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்-தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி பலியான சிறுவன் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுவன் பரிதாப சாவு

தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டியதில் பாலக்கோட்டை சேர்ந்த பள்ளி சிறுவன் கோகுல் (வயது 13) பலியானான். நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. அப்போது இறந்து போன சிறுவன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி எம்.எல்.ஏ., பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் அரசு மருத்துவமனையில் பள்ளி சிறுவன் கோகுல் உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள் சிறுவனின் உறவினர்களை் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் எம்.எல்.ஏ.க்கள் சிறுவன் இறந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

ரூ.50 லட்சம் நிவாரணம்

தர்மபுரி அருகே தடங்கம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் முறையாக பாதுகாப்பு அளிக்கவில்லை. ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இறந்த சிறுவன் கோகுலின் தந்தை சீனிவாசன் ஜல்லிக்கட்டு நடந்த இடத்தில் மருத்துவ வசதி முறையாக இல்லை. ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படவில்லை. முறையான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யவில்லை என தெளிவாக கூறியுள்ளார்.

சிறுவனை இழந்து வாடும் அந்த குடும்பத்திற்கு அரசு சார்பாக ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். சிறுவன் இறந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்கள் யார்? என்று பதிவு செய்யாமல் உள்ளனர். ஆகவே, அதற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சிறுவனை இழந்து வாடும் இந்தநிலையிலும் அவனது கண்கள் வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றோர்கள் சிறுவனின் கண்களை தானமாக வழங்கி உள்ளனர்.

இவ்வாறு கே.பி.அன்பழகன் கூறினார்.

அப்போது பாலக்கோடு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செந்தில், நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

போராட்டம் வாபஸ்

இந்தநிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிறுவன் கோகுல் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. மேலும் அரசு நிவாரணம் மற்றும் காப்பீட்டு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பின்னர் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story