தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட துணை செயலாளர் சுதர்சனன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் மணி, கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் நடராஜன், மணி, முருகன், கோவிந்தராஜ், புகழேந்தி, ரவி, வெங்கடாசலம், சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

தொழிலாளர் நல வாரியங்களில் தகுதியுள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக பாதுகாப்பு திட்டத்தில் தொழிலாளர்கள் சேர முடியாமல் தவிக்கும் நிலையை மாற்ற வேண்டும்.

வீடு கட்ட மானியம்

ஆதார் இணைப்பு, பான்கார்டு, கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல், ஆன்லைன் பதிவு ஆகியவற்றை எளிமைப்படுத்தி தொழிலாளர்கள் அலைகழிக்கப்படுவதை தடுக்க வேண்டும். கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை ஆகியவற்றை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வயதான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வீடு கட்ட மானியத்தை விரைவாக வழங்க வேண்டும்.

நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம், ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் போனஸ் ஆகியவற்றை வழங்க வேண்டும். பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் நலவாரிய பயன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story