காரிமங்கலம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் ஊராட்சி சொர்ணம்பட்டியில் நூற்றுக்கணகான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த சில வாரங்களாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பொதுமக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று காலை குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் காரிமங்கலம்-பாலக்கோடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.