திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தீபக்ராஜ் தலைமை தாங்கினார். தலைவர் முகேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு ஏற்கனவே உள்ள சாதிச்சான்றிதழ் அடிப்படையில் கல்வி மற்றும் உதவித்தொகை வழங்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும்.
ஏற்கனவே வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழ் செல்லாது என்றும், புதிதாக ஆன்லைன் மூலம் வழங்கப்பட்ட சாதிச்சான்றிதழை வைத்து உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்படி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் உதவித்தொகை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவ-மாணவிகள் உள்ளனர். எனவே அவர்களின் அச்சத்தை போக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிலக்கோட்டை தாலுகா புதுப்பட்டியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.