தர்மபுரியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி ஊரக வளர்ச்சி துறை அலுவலகம் முன்பு நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஆறுமுகம், நிர்வாகிகள் இளங்குமரன், சங்கர் சர்வோத்தமன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுருளிநாதன், மாவட்ட நிர்வாகி புகழேந்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகம், ஊராட்சி செயலாளர் பணி விதிகள், சிறப்பு நிலை, தேர்வு நிலை அரசாணையை வெளியிடவேண்டும். கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊதிய மாற்றம் குறித்த அரசாணையை வெளியிட வேண்டும். உதவி பொறியாளர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வை முறையாக வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.