ஏரியூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
ஏரியூர்:
ஏரியூர் அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பணித்தள பொறுப்பாளர் பணி
பென்னாகரம் தாலுகா ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை ஊராட்சியில் பணித்தள பொறுப்பாளர் பணி காலியாக இருந்தது. இதற்கு தகுதியின் அடிப்படையில் தங்களை நியமிக்கக்கூறி பெரும்பாலை ஊராட்சி இந்திரா காலனியை சேர்ந்த பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
ஆனால் வேறொரு ஊராட்சியை சேர்ந்த பெண்ணுக்கு பணித்தள பொறுப்பாளர் பணி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
முற்றுகை
இந்தநிலையில் இந்திரா காலனியை சேர்ந்த பெண்கள் நேற்று ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் பறை அடித்து, ஊராட்சி மன்ற வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பெண்கள் பணித்தள பொறுப்பாளர் பணி முறைகேடாக வேறொரு பெண்ணுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணைக்கு பரிந்துரைப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதில் சமாதானமடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.